தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன்ராஜா. அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது ஒன்று அல்ல ஜெயம் ரவி என்கிற இன்னொரு பொக்கிஷமும் கூட. அதைத்தொடர்ந்து தெலுங்கில் வெற்றிபெற்ற சூப்பர்ஹிட் படங்களை தமிழுக்கு ஏற்றவாறு அழகாக ரீமேக் செய்து இங்கேயும் தொடர் வெற்றிகளை பெற்று சாதித்துக் காட்டினார் மோகன்ராஜா.
அதற்காகவே அவருக்கு ரீமேக் கிங் என்கிற பட்டத்தையும் ரசிகர்கள் தாங்களாகவே சூட்டினார்கள். ஆனால் ரீமேக் படத்தை இயக்குவது அவ்வளவு ஒன்றும் எளிதான செயல் அல்ல என்பது இங்கே பலருக்கு புரியவில்லை. எத்தனையோ பேர் ரீமேக் படங்களை சரியாக இயக்காமல் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
இடையில் மோகன்ராஜா தனி ஒருவன் என்கிற சொந்தமான கதையை இயக்கி அதிலும் வெற்றி பெற்று காட்டினார். அடுத்ததாக வேலைக்காரன் படம் சிறிது சறுக்கலை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தினாலும் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் என்கிற ரீமேக் படத்தை இயக்கி மீண்டும் சாதித்துக் காட்டியுள்ளார் மோகன்ராஜா.
பொதுவாக ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்களை மற்றொரு மொழியில் ரீமேக் செய்யும்போது, பெரும்பாலான காட்சிகளை அதன் கோணங்களுடன் பிரதி எடுப்பார்கள். ஆனால் இதில் தனித்துவமான நிபுணத்துவம் பெற்றிருக்கும் இயக்குநர் மோகன்ராஜா, ‘லூசிபர்’ திரைப்படத்தின் ஜீவனுள்ள கதை மற்றும் அதற்கான காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு, தெலுங்கு ரசிகர்களின் உணர்வுகளுக்கு ஏற்பவும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இமேஜிற்கு ஏற்றாற்போல் சில காட்சிகளை இணைத்தும் படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்..
மெகாஸ்டார் சிரஞ்சீவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமுத்திரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையே நேற்று ( அக்டோபர் 5 ஆம் தேதி) வெளியானது. படத்தை பார்த்த மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ரசிகர்கள், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மேல் மாஸான காட்சிகளும், சண்டை காட்சிகளும் இடம் பெற்றதால் படத்தை கொண்டாட தொடங்கி இருக்கிறார்கள்.