நடிகர் விஷால் தற்போது லத்தி படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா, நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதற்கு முன்பாக மாநாடு படத்தில் காமெடி கலந்த வித்தியாசமான நடிப்பால் இன்னும் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள எஸ்.ஜே சூர்யா இந்தப் படத்தில் எந்தவிதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் வித்தியாசமான கிடா மீசையுடன் பார்ப்பதற்கே அசத்தலான லுக்கில் மிரட்டுகிறார் எஸ்.ஜே சூர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது.