சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் மிகப்பிரமாண்டமான வரலாற்றுப்படமாக உருவாகிவரும் ஹரிஹர வீரமல்லு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்துவரும் இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கிரிஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்று முடிந்துவிட்டது.

இந்த நிலையில் நாயகி நிதி அகர்வால் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து படமாக்கப்பட உள்ளன. இதற்காக சரஸ்வதி பஞ்சபி தினத்தை முன்னிட்டு பூஜையுடன் ஒர்க்ஷாப் பணிகள் துவங்கின.

இந்த ஒர்க்ஷாப்பில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டு தனது கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கிரிஷ் விளக்குவதை ஆர்வமுடன் கேட்டு அதன்படி தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார்.