பாகுபலி என்கிற ஃபேண்டசி வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பிரபலம் சேர்த்து பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். வரலாற்று படத்தை தொடர்ந்து சலார் என்கிற ஆக்சன் படத்தில் நடித்தார். அடுத்ததாக ராதேஷ்யாம் என்கிற ரொமாண்டிக் காதல் கதையில் நடித்தார்.
இப்படி வித்தியாசமான கதைகளில் நடித்துவரும் பிரபாஸ் தற்போது புராண இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக கிருத்தி சனன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் மற்றும் ஐம்பதடி உயர போஸ்டர், இப்படத்தின் கதையின் நாயகனான ஸ்ரீ ராமபிரான் பிறந்த புனித இடமாக கருதப்படும் அயோத்தி மாநகரில் உள்ள சரயு நதிக்கரையில், பிரம்மாண்டமான ஒலி ஒளி அமைப்பு, லேசர் விளக்குகள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் வெளியிடப்பட்டது.
ராமாயண காவியத்தை தற்போதைய இணைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘ஆதி புருஷ்’ தயாராகி இருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்தப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.