கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இசையமைப்பாளராக அறிமுகமாக வேண்டுமென சினிமாவில் களமிறங்கிய ஸ்ருதிஹாசன் எதிர்பாராத விதமாக நடிகையாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் மாறிமாறி நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தற்போது புதிய முயற்சியாக சர்வதேச அளவில் பிரபலமாகி இருக்கும் ஆடியோ நாடகமான தி சான்ட்மேன்: ஆக்ட்’எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார்.
கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ எனும் ஆடியோ நாடகத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், வேர்ல்ட்ஸ் எண்ட் இன் ( World End Inn) ல் ஒரு வீட்டு பணிப்பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், ” இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் தயாரிப்பாளர்கள் இந்த தொடரை வெவ்வேறு தளங்களில் பிரபலப்படுத்தி இருக்கிறார்கள்.