Home Review பொன்னியின் செல்வன் ; விமர்சனம்

பொன்னியின் செல்வன் ; விமர்சனம்

தமிழ் சினிமாவில் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பல்வேறு நாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முயன்றும் படமாக்க முடியாத அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வெற்றிகரமாக படமாக்கி முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வனை உருவாக்கி அதன் முதல் பாகத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார் மணிரத்னம்.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காதல், பாசம், நட்பு, அதிகாரப் போட்டி, சூழ்ச்சி, பேராசை, வெற்றி என அனைத்தையும் வந்தியத்தேவனின் பயணங்கள் வாயிலாக காட்சிப்படுத்துகிறது படம்.

தஞ்சையை ஆளும் சுந்தரச் சோழர் (பிரகாஷ்ராஜ்) உடல் நலமின்றி இருக்கிறார். அடுத்து முடி சூட அவர் மகன்கள், ஆதித்த கரிகாலனும் (விக்ரம்), அருள்மொழிவர்மனும் (ஜெயம் ரவி) இருக்கிறார்கள். தன அதிகாரியான மாவீரர் பெரிய பளுவேட்டைரையர் (சரத்குமார்) தலைமையில் சிற்றரசர் குழு, சுந்தரச் சோழரின் பெரியப்பா மகன் மதுராந்தகனை (ரஹ்மான்) அரியணையில் அமர்த்தத் திட்டம் தீட்டுகிறது.

தன் தந்தைக்கு எதிராக சதி நடப்பதை அறியும் ஆதித்த கரிகாலன், அந்தச் சதி என்ன என்பதை அறியவும், குந்தவையை சந்திக்கவும் வந்தியத்தேவனை (கார்த்தி) தூதனுப்புகிறார். அங்கிருந்து கிளம்பும் வந்தியத்தேவன், வழியில் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நந்தினியை சந்தித்து விஷயங்களை சேகரித்துக் கொள்கிறார்.

பிறகு அங்கிருந்து கிளம்பும் வந்தியத்தேவன், சுந்தர சோழனையும், குந்தவையையும் சந்தித்து விஷயங்களை தெரிவித்துவிட்டு பிறகு அங்கிருந்து இலங்கையில் இருக்கும் பொன்னியின் செல்வனை சந்தித்து சோழ நாட்டுக்குள் நடக்கும் சூழ்ச்சிகள் குறித்து தெரிவிக்கிறார்.

இதையடுத்து ஆதித்த கரிகாலனால் கொலை செய்யப்பட்ட பாண்டிய மன்னரின் ஆபத்துதவிகள் படையினர் சோழ சாம்ராஜ்யத்தை முற்றிலுமாக அழிக்க சபதம் எடுக்கின்றனர். அதேபோல் பெரிய பழுவேட்டறையர் மனைவி நந்தினியும் அதிகாரத்தின் மீது ஆசைப்படுகிறார். இப்படி இருக்கும் சூழலில் சோழ சாம்ராஜ்யத்திற்கு இவர்களால் அடுத்தடுத்து என்ன பாதகம் ஏற்படுகிறது? இவர்களின் சூழ்ச்சியில் இருந்து மன்னர் குடும்பம் தப்பித்ததா, இல்லையா? என்பதே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மீதி கதை.

படித்த கதைதான் என்றாலும் அதைப் படமாக்கிய விதத்தில், ஒரு மெகா பிரம்மாண்டத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார், மணிரத்னம். அந்தப் பிரம்மாண்டத்துக்கு அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் ஒளிப்பதிவும் இசையும் விஎப்எக்ஸ் காட்சிகளும் ஜெயமோகன், இளங்கோ குமரவேலின் திரைக்கதையும் ஆழமாகக் கைகொடுத்திருக்கின்றன.

ஐந்து பாகங்கள் கொண்ட இந்த கதையில் உள்ள முதல் இரண்டு பாகங்களை இப்படத்தில் சுருக்கி, அதேசமயம் அதை ரசிக்கும் படியும் கொடுத்து இந்தியாவை திரும்பிப் பார்க்க செய்துள்ளார். தமிழரின் பெருமையை பேசும் இந்த நாவலை படமாக்கிய விதத்தையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை சரியான விகிதத்தில் காட்சிப்படுத்தி அவைகளை ஆழமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் காட்டி பெர்ஃபார்மன்ஸ் ஓரியன்டட் மூவியாக படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்துள்ளார்.

காட்சிகளை எவ்வளவுக்கு எவ்வளவு ரியலிஸ்ட்டிக்காக அமைக்க முடியுமோ அந்த அளவு ரியலிஸ்டிக்காக அமைத்து காட்சிகளுக்கு உயிரூட்டி படத்தை கரை சேர்த்துள்ளார்.

இப்படத்தின் மிகப்பெரிய பலமே கதாப்பாத்திர தேர்வு தான். இதில் நடித்த அனைத்து நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி சிறப்பான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளனர். ஆதித்த கரிகாலன் விக்ரம் ஒரே நேரத்தில் கோபம், சோகம், வெறுப்பு என உணர்ச்சி பொங்கும்படியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

வந்தியத்தேவனாக கார்த்தி எளிமையான நடிப்பை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தி பார்ப்பவர்களை சிரிக்கவும், மெய்சிலிர்க்கவும் வைத்துள்ளார். சோழ அரசின் விசுவாசி, பெண்களை விரும்புகிறவன், சிறந்த வீரன் என்ற வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்குத் தன்னைவிட சிறப்பானத் தேர்வு இருந்துவிட முடியாது என்பதை காட்டியிருக்கிறார். கதையில் படித்த வந்தியதேவனை கண்முன் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அருள்மொழி வர்மனாக வரும் ஜெயம் ரவி இரண்டாம் பாதியில் தான் வருகிறார். பல இடங்களில் சற்றே அடக்கி வாசித்து அதே சமயம் பல வித்தைகளை சரியான நேரத்தில் அவ்வப்போது வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார்.

நந்தினி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராய் கச்சிதம். படத்தின் முக்கியமான கதாப்பாத்திரம் அவருக்கு, அவரின் கம்பீரம், அழகு, சூழ்ச்சி செய்யும் அறிவான மூளை என நந்தினியாக வாழ்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அவர் பார்வையும் பேச்சும் பெரிய பழுவேட்டரையரை மட்டுமல்ல, அனைவரையும் கொள்ளை கொள்ளும். அதே சமயத்தில் ஊமை ராணியாக முக்கியமான கதாப்பாத்திரத்திலும் மிரட்டியுள்ளார்.

குந்தவை த்ரிஷாவும் கம்பீரமாக இருக்கிறார், சிற்றரசர்களின் சதியை முறியடிக்கும் காட்சியில் அவரின் நடிப்பு பிரமாதம். இரண்டாம் பாதியில் வந்தாலும் இவர்களுக்கு இணையான கதாப்பாத்திரம் பூங்குழலி உடையது. ஐஸ்வர்யா லக்ஷ்மி பூங்குழலி பாத்திரத்திற்கு சரியான தேர்வு.

பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், சிறிய பழுவேட்டரையர் பார்த்திபன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சரியான அளவில் ஸ்கோர் செய்துள்ளனர். ஆழ்வார்கடியானாக வரும் ஜெயராம் தாங்கி தாங்கி நடந்து கொண்டு வசனம் பேசி ஜனரஞ்சகமான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி சென்றுள்ளார். பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளாக வரும் கிஷோர் மற்றும் அவரது படையினர் சில காட்சிகளே வந்தாலும் மிரட்டி உள்ளனர்.

இவர்களுடன் பார்த்திபேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் பிரபு, மதுராந்தகன் ரஹ்மான், சேந்தன் அமுதன் அஷ்வின் உட்பட அனைவரும் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பிரம்மாண்ட கோட்டையின் ஆச்சரியத்தையும், போர்க்காட்சிகளில் மிரட்டலையும் ஆர்ப்பாட்டமாகக் காட்டியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பெரும் பலம். தோட்டா தரணியின் கலை நம்மை பிரமிக்க வைக்கிறது.

படத்தின் முடிவும் இறுதித் தருணத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரத்தின் முகமும் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பைப் அதிகரித்துள்ளன.

நாவலை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் படத்தை காண திரையரங்குக்கு சென்றால் நிச்சயம் திரையில் மேஜிக் தான்.