நடிகர்கள் ; தனுஷ், இந்துஜா, எலி அவுரம், பிரபு,, யோகிபாபு, செல்வராகவன் மற்றும் பலர்
இசை ; யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு ; ஓம் பிரகாஷ்
இயக்கம் ; செல்வராகவன்
ட்வின்ஸ் தனுஷ்.. அதில் ஒருவரின் வித்தியாசமான நடவடிக்கைகள் காரணமாக வீட்டில் உள்ளவர் உயிருக்கு ஆபத்து என அறிந்து பெற்றோரே அவரை வலிந்து கண்காணாத இடத்தில் விட்டு செல்கின்றனர்.. இன்னொரு தனுஷ் வளர்ந்தபின் மனைவி இந்துஜா, ஒரு பெண் குழந்தை தந்தை என அழகான வாழ்க்கையை வாழ்கிறார். திடீரென மகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட அவரை மனநல மருத்துவர் பிரபுவிடம் அழைத்து சென்று காட்டுகிறார்.
ஆனாலும் பலன் கிடைக்காமல் போகவே தனது மகள் அமானுஷ்ய சக்தியால் ஆட்டுவிக்கப்படுவதை கண்டறிகிறார் தனுஷ். அப்படி ஆட்டுவிக்கும் அந்த சக்தி, ட்வின்ஸ் தனுஷில் இன்னொருவரான அவரது சகோதரரை இந்த தனுஷ் கொல்லவேண்டும் என்றும் அது நடந்தால் தான் மகளை விட்டு போவேன் எனவும் நிபந்தனை விதிக்கிறது..
இத்தனை வருடங்களாக எங்கே இருக்கிறார் என்றே தெரியாத தனது அண்ணன் பற்றி கேள்விப்பட்டது ஒரு அதிர்ச்சி என்றால், அவரை கொல்ல சொல்லி அமானுஷ்ய சக்தி ஒன்று தனக்கு கட்டளை இடுவது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.. அப்படி தனது அண்ணனையே கொல்ல சொல்வது யார், அந்த அளவுக்கு தனது அண்ணன் தனுஷ் யாருக்கு என்ன கொடுமை என்ன செய்தார், அமானுஷ்ய சக்தியின் உத்தரவை நிறைவேற்றி தனது மகளை காப்பாற்ற தனது அண்ணனையே கொல்ல தம்பி கிளம்பினாரா என்பது மீதிக்கதை.
அண்ணன் தம்பியாக தனுஷ்.. அப்பாவித்தனமாக சாந்தமுகமும் சைக்கோவாக ஆக்ரோஷ முகமும் காட்டி இரண்டிலுமே தனித்துவம் காட்டியுள்ளார். மகளின் உயிரை காப்பாற்ற கர்ணனாக கிளம்பும் அதே வேளையில் மகன்களின் உயிருக்கே எமனாக மாறும் அசுரனாகவும் அதிர வைக்கிறார். நிச்சயமாக தனுஷ் படங்களில் இது ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.
அப்பாவி தனுஷின் மனைவியாக பாந்தமான குடும்பத்தலைவியாக இந்துஜாவும் வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக எலி அவ்ரமும் தனகளது பங்கை நிறைவாக செய்துள்ளனர்.
யோகிபாபு சில கட்சிகளில் மட்டுமே வந்தாலு காமெடியை குறைத்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். மனநல மருத்துவராக பிரபுவும் சரியான தேர்வு. நிறைய நேரம் திரையில் தோன்றி மிரட்டுவார் என எதிர்பார்த்தால் கொஞ்ச நேரமே வந்து ஏமாற்றம் தருகிறார் நடிகர் செல்வராகவன்.. ஆனாலும் அவரது கதாபாத்திரம் சூப்பர்.
படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு ட்வின்ஸ் கதாபாத்திரங்களுமே தங்களது நடிப்பால் மிரட்டியுள்ளனர். குறிப்பாக தனுஷின் மகளாக நடித்திருப்பவர் துல்லியமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை தாங்கி பிடிக்கிறார்.
காடு மற்றும் மலைப்புகுதி சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஓம் பிரகாஷின் கேமரா வர்ணஜாலம் காட்டியுள்ளது. யுவனின் பாடல்கள் ஒருபக்கம் பின்னணி இசை மறுபக்கம் என படத்தை தாங்கிப்பிடிக்கும் தூணாக அமைந்துள்ளது.
ஹாரர் படங்களில் அமானுஷ்ய சக்தியை கண்டுபிடிக்கும் முறையில் இந்தப்படத்தில் ஹாலிவுட் தரத்தை கையாண்டுள்ளார் செல்வராகவன்.. படத்தின் பிளஸ் பாயிண்ட்டே அதன் வேகம் தான்.. இடைவேளை ட்விஸ்ட் யாருமே எதிர்பாராதது என்றால் இடைவேளைக்குக்கு பின் வரும் காட்சிகள் யாராலும் யூகிக்க முடியாதவையாக இருப்பது இன்னும் ஆச்சர்யம்.
கொடி படத்திற்கு பிறகு டிவின்ஸ் கதாபாத்திர அம்சத்தோடு தனுஷ் ரசிகர்களை கவரும் விதமாக நானே வருவேன் படம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.