தமிழ் சினிமாவின் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களாக வலம்வந்த கதாநாயகர்கள் காலப்போக்கில் படங்கள் குறைந்து அப்படியே நடிப்பை விட்டு ஒதுங்கி விடுவது வழக்கம்.. சிலர் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடித்து சினிமாவை விட்டு தள்ளியே நிற்கிறார்கள்.
இன்னும் சிலரோ கதையின் நாயகனாக, வில்லனாக, முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர நடிகர் என, ஏதோ ஒரு ரூபத்தில் தங்களது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருவார்கள். அப்படிப்பட்டவர்களின் லிஸ்ட்டில் தற்போது முதல் ஆளாக இருப்பவர் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான்..
கதாநாயகனாக தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டாமல் கதையின் நாயகனாகவும் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் தற்போது நடித்து வருகிறார் சரத்குமார். தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தேடப்படும் முக்கிய நடிகராக சரத்குமார் இருக்கிறார்.
தெலுங்கில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார், மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படம் திலீப்புடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடிக்கிறார்.
அதேபோல தமிழில் தற்போது பெரிய பழுவேட்டரையர் என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ள வரலாற்று படமான பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. பழசிராஜா திரைப்படத்தை தொடர்ந்து சரத்குமார் நடிக்கும் வரலாற்று படம் இது என்று சொல்லலாம்.
இது தவிர மழை பிடிக்காத மனிதன், பரம்பொருள், சமரன், நிறங்கள் மூன்று, ருத்ரன், ஆழி உள்ளிட்ட 21 படங்கள் இவரது கைவசம் இருக்கின்றன இது பற்றி சரத்குமார் கூறும்போது, “இப்போது நான் வில்லனாக நடிப்பது குறித்து கேட்கிறார்கள் நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள் தான். அதில் சிறப்பாக நடிப்பவர்கள் தான் நல்ல நடிகராக இருக்க முடியும். என்கிறார்