செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.
அதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 30-ம் தேதி உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.
பொதுவாக இதுபோன்று அனைவருமே எதிர்பார்க்கும் ஒரு மாபெரும் படம் அதுவும் வரலாற்று படம் வரும்போது மற்ற பிரபல நடிகர்கள் கூட தங்களது படங்களின் ரிலீஸ் செய்தியை அதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.
அந்த வரலாற்று படம் எடுப்பதற்கு மிகப்பெரிய பொருள் செலவாகி இருக்கும் அதனால் அந்த படத்தின் வசூல் சிந்தாமல் சிதறாமல் தயாரிப்பாளருக்கு செல்லவேண்டும் என்பதுதான் காரணம்.
இந்த நிலையில் தனுஷ் படம், பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் சமயத்திலேயே அதற்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியாவது திரையுலகில் ஒருவிதமான சலசலப்புக்கு விதை போட்டுள்ளது.
பலரும் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக எதற்காக கலைப்புலி தனது படத்தை வெளியிடுகிறார் என்றும் நடிகர் தனுஷாவது தனது படத்தின் ரிலீஸ் செய்தியை மாற்றும்படி தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்க கூடாதா என்றெல்லாம் பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் கலைப்புலி தாணு, தனுஷ் இருவருக்குமே மணிரத்னத்துடன் ஏதோ உள்பகை இருப்பது போன்றும் கதைகளை கட்டிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தாணு கூறும்போது, “பொன்னியின் செல்வன் படத்துடன் மோதவேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் எதுவும் இல்லை. இந்த படத்தை செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய வேண்டுமென ஜூன் மாதமே முடிவு செய்து விட்டோம்.
அதுவும் தவிர தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை என்பதால் இந்த வாய்ப்பை தவறவிட தயாராக இல்லை இதுதான் காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதேசமயம் தியேட்டர் உரிமையாளர்களிடம் பொன்னியின் செல்வனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.. அவர்களுக்கு 55 சதவீதம் கொடுங்கள் எங்களுக்கு 45 சதவீதம் போதும் என்றுதான் கூறியுள்ளேன். விட்டுக்கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை” என்று கூறியுள்ளார் கலைப்புலி.