பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் சொல்வார்கள்.. ரஜினியாக இருக்கும் கஷ்டம் ரஜினிக்கு மட்டும் தான் தெரியும் என்று.. அந்த அளவிற்கு மக்களால் போற்றப்படும் பிரபலங்களாக இருப்பவர்களின் கஷ்டம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறுவதுபோல நடிகர் விக்ரம் சமீபத்திய பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது ஐஸ்வர்யாராய் ஆக இருப்பதன் கஷ்டம் அவருக்கு மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் ஒவ்வொரு மொழி திரையுலகையும் சார்ந்த முக்கிய நகரங்களில் தங்களது புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.


அந்த வகையில் டெல்லியில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் பேசும்போது, “ஒரு அழகான உருவத்திற்கு பொருத்தமான அடையாளம் என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். அவர் ஒவ்வொருவர் இதயத்தையும் திருடி விட்டார். நான் அவரது படங்களை பார்த்திருக்கிறேன். வெறும் அழகால் மட்டுமல்ல நடிப்பாலும் பிரமிக்க வைத்தவர். எப்போதும் பல கேமராக்களின் கண்காணிப்பிலேயே இருந்து வரும் ஐஸ்வர்யா ராய் அவராகவே இருப்பது எளிதான விஷயமல்ல. நான் அவரது தீவிரமான ரசிகன்” என்று கூறியுள்ளார்.