V4UMEDIA
HomeNewsKollywoodகுழலி ; விமர்சனம்

குழலி ; விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஜாதியை தூக்கிப்பிடித்து பல படங்கள் வந்திருக்கின்றன. ஜாதி வேண்டாம் என்று கூறியும் நிறைய படங்கள் வந்துள்ளன. இதில் இரண்டாவது வகையை சேர்ந்தது தான் தற்போது வெளியாகியிருக்கும் குழலி திரைப்படம்.

கிராமம் ஒன்றில் பள்ளியில் படிக்கும் தாழ்ந்த சாதி மாணவன் காக்கா முட்டை விக்னேஷ்.. தந்தை இல்லாமல் தாயின் வளர்ப்பில் வளரும் மேல் சாதியை சேர்ந்த ஆரா. இவர்கள் இருவருக்கும் ஆரம்பிக்கும் சிறு வயது நட்பு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது.

ஒரு கட்டத்தில் இவர்களது காதல் வீட்டிற்கும் ஊராருக்கும் தெரியவர மகளின் படிப்பை நிறுத்திவிட்டு அவளுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையை நிச்சயம் செய்கிறார் அம்மா. படித்து பெரிய பதவிக்கு வர வேண்டும் என நினைக்கும் ஆரா தனது கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஊரைவிட்டு வெளியேற நினைத்து கிளம்புகிறார்.

தான் உதவிக்கு வருவதாக ஆராவுக்கு கைகொடுக்கும் நோக்கில் கிளம்புகிறார் விக்னேஷ். ஆராவின் கனவு நிறைவேறியதா, விக்னேஷின் காதல் கை கூடியதா, இறுதியில் என்ன நடந்தது என்பது மனதை புரட்டிப் போடும் கிளைமாக்ஸ்.

காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக புரமோஷன் பெற்றுள்ளார். பள்ளி மாணவனாக அவர் பொருத்தமான தேர்வு. அந்த வயதிற்கே உண்டாகும் குறுகுறுப்பும் இனக்கவர்ச்சியும் என தனது கதாபாத்திரம் மூலமாக மிகச்சரியாக அந்த தடுமாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளார் விக்னேஷ்.

கதாநாயகி பள்ளி மாணவியாக ஆராவின் நடிப்பில் ரொம்பவே முதிர்ச்சி தென்படுகிறது. பல காட்சிகளில் அவரது முகபாவமும் அவர் பேசும் வசனங்களும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இவர்களைத் தாண்டி படத்தில் அதிக நேரம் தனது பங்களிப்பை தந்து எதார்த்தமான வெள்ளந்தியான கிராமத்து அம்மாவாக பசங்க செந்திகுமாரி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் நடித்துள்ள மற்ற துணை கதாபாத்திரங்களும் ஒரு கிராமத்திலே நாம் பார்க்கும் எதார்த்தமான மனிதர்களையும் அவர்களது கோபங்களையும் அழகாக இயல்பாக பிரதிபலித்து இருக்கின்றனர்.

அதேசமயம் எண்பதுகளில் இருந்து நாம் பார்த்த சாதிய படங்களின் அடிப்படை காட்சிகள் இதிலும் மாறாமல் அப்படியே இருப்பதை இன்னும் கொஞ்சம் மாற்றி வேறுவிதமாக யோசித்திருக்கலாம். இந்தப்படத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா என்ற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தி உள்ள இயக்குனர் செரா.கலையரசன் கிளைமாக்சில் சாதி பற்றிய தனது கருத்தை அழுத்தமாக கூறி முத்திரை பதித்துள்ளார். அதற்கு அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்

Most Popular

Recent Comments