அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபுவும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதற்காக கர்நாடகாவிலிருந்து மீடியாவை சேர்ந்த சிலர் வருகை தந்திருந்தனர் அதில் கன்னட தொகுப்பாளர் அனுஸ்ரீ என்பவர் கன்னட திரையுலகம் சார்பாக பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு, குறிப்பாக அந்தப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருக்கும் புனித் ராஜ்குமார் உருவம் பதித்த வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள விக்ரம்பிரபு புனித் ராஜ்குமார் குறித்து தனது நினைவுகளை நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வந்த புனித் ராஜ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
திரையுலகில் மிக எளிமையானவராக வலம்வந்த புனித் ராஜ்குமாரின் மறைவிற்குப் பிறகு அவர் யாரும் அறியாமல் செய்த பல நல்ல விஷயங்களும் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கின.
அந்த வகையில் தற்போது அவர் இறந்தும் கூட பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு அவர் மூலமாக பரிசும் கவுரவமும் கிடைத்துள்ளது என்றால் அது உண்மையிலேயே நெகிழ்ச்சியான நிகழ்வுதான்.