வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது. மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபு என பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சுற்றுப்பயணத்தை தற்போது படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.
இதன் முதல் கட்டமாக கேரளாவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரம் வந்து இறங்கிய விக்ரம், விழாவில் வரவேற்புக்காக வாசிக்கப்பட்ட செண்டை மேளத்தை பார்த்ததும் அதை சிறிது நேரம் தானும் இசைக்க ஆரம்பித்தார். இது அங்கு கூடியிருந்த ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்த படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் ஜெயராம் கூட ஏற்கனவே செண்டை மேளம் வாசிப்பதில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வில்லன் நடிகர் பாபு ஆண்டனியும் கலந்துகொண்டார்.