ஒருபக்கம் கொலை, ரத்தம் என ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி, இன்னொரு பக்கம் மழை பிடிக்காத மனிதன், வள்ளிமயில் போன்ற கமர்சியல் அம்சங்கள் குறைவான அதேசமயம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் தான் வள்ளிமயில்.

இந்த படம் 1980 காலகட்ட பின்னணியில் நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த காலகட்டத்தை கண்முன் கொண்டு வரும் விதமாக திண்டுக்கல் பகுதியில் ஒரு கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது திண்டுக்கல் பகுதியில் உள்ள சிறுமலையில் காட்டுப்பகுதியில் இந்த படத்திற்காக ஒரு பழமையான கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி இங்கே படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பரியா அப்துல்லா கிட்டத்தட்ட 50 சண்டை கலைஞர்களுடன் மோதும் சண்டை காட்சிகளும் தற்போது இங்கே படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா புகழ் சுனில், ஜிபி முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.