நடிகர் அஜித்தை பொருத்தவரை ஒரு இயக்குனரை அவருக்கு பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றுவார். இதற்கு முந்தைய உதாரணம் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அவர் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை கூறலாம்.
அந்தவகையில் தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் எச்.வினோத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் முதன்முறையாக கைகோர்த்த அஜித், அதைத்தொடர்ந்து வலிமை என்கிற படத்தில் நடித்தார்.
தற்போது அதே இயக்குனரின் டைரக்ஷனில், அதே தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் பெயரிடப்படாத படத்தில் அஜீத் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு துணிவு என டைட்டில் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் படங்களுக்கு வீரம், வலிமை, துணிவு என ரசிகர்களுக்கு பாசிட்டிவான ஒரு கருத்தை வலியுறுத்தும் விதமாக டைட்டில்கள் அமைந்து வருவது ஆச்சரியம் அளிக்கும் விஷயமாகும்.
இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துவருகிறார். அசுரன் படத்தை தொடர்ந்து அவர் தமிழில் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.