உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் வினய் ராய். ஆனால் கடந்த சில வருடங்களாக வில்லன் அவதாரம் எடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

விஷாலின் துப்பறிவாளன், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களில் ஹைடெக் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் வினய் ராய்.

இந்தநிலையில் மீண்டும் ஹீரோவாக தனது பழைய பாதைக்கே திரும்பியுள்ளார் வினய் ராய்.. ஆம்.. ‘மர்டர் லைவ்’ என்கிற புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வினய். தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

வினய் ராய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் எம்.ஏ..முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப்படத்தில் ஒரு சைக்கோ கொலையாளிக்கும், நான்கு பெண்களுக்கும் இடையே நிகழும் சம்பவங்கள் தான் பரபர திரைக்கதை. புத்திசாலித்தனத்துடன் கூடிய கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இதன் திரைக்கதை புதுமையாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும்.

இதன், கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை டாட் காம் எண்டர்டெய்ன்ட் லிமிடெட் எனும் நிறுவனம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
ஹாலிவுட்டில் வெளியான ‘ப்ளைன்ட் டேட்’, ‘ஸ்கை ஹை’, ‘டெர்மினல் எக்ஸ்போசர்’, ‘கிளிட்ச்’, ‘இன் தி கோல்ட் நைட்’ ஆகிய படங்களை எழுதி, இயக்கி, தயாரித்த தயாரிப்பாளர் நிக்கோ மாஸ்டோராகிஸ் இயக்கத்தில் வெளியான ‘டாட் காம் ஃபார் மர்டர்’ என்ற ஆங்கில படத்தை தழுவி ‘மர்டர் லைவ்’ எனும் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

இப்படத்தின் நாயகன் உலகில் அனைத்து இடத்திலும் இருக்கும் கணினி மூலமாகவோ… இணையதளம் மூலமாகவோ.. ஊடுருவி, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுவார். இந்த திரைப்படம் முழுவதும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.