V4UMEDIA
HomeNewsKollywoodரஜினி கமலுக்கு போட்டியாக ராமராஜன் என்றுமே இருந்ததில்லை ; ராதாரவி வெளிப்படை பேச்சு

ரஜினி கமலுக்கு போட்டியாக ராமராஜன் என்றுமே இருந்ததில்லை ; ராதாரவி வெளிப்படை பேச்சு

90களில் கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களில் மக்களோடு மக்களாக எளிய மனிதனாக நடித்து மக்கள் நாயகன் என பெயர் பெற்றவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து சில்வர் ஜூப்ளி படங்களாக நடித்த அவர் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல் இருவரின் படங்களுக்கு இணையான வசூலை பெற்றார். கடைசியாக 2012ல் மேதை என்கிற படத்தில் நடித்த ராமராஜன் கிட்டத்தட்ட 10 வருட இடைவெளி விட்டு தற்போது சாமானியன் என்ற படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார்.

ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அப்போது ராதாரவி பேசும்போது “நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன்.. அதுதான் நடந்தது.

அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன். ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது படங்கள் அந்த இருவரின் படங்களை விட நன்றாக ஓடின. அவ்வளவுதான்.. ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது” என்று கூறினார்.

நடிகர் ராமராஜன் பேசும்போது, “என்னுடைய கரகாட்டக்காரன் படம் இதே கிருஷ்ணவேணி தியேட்டரில் அன்று 300 நாட்கள் ஓடியது. இன்று அதே தியேட்டரில் என்னுடைய படத்தின் விழா நடப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படத்தில்  நான்  ஹீரோ என்பதைவிட  கதையும் திரைக்கதையும் தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப்போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள் அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது. 

இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின்தொடர்வது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது. 

இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்துவிட்டேன் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை இந்த படத்திற்காக முதன்முறையாக தாடி வைத்து நடிக்கிறேன். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது அவர் சொன்ன இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்துவிட்டேன். இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல்.

இந்தப்படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் விஅழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கும் இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்..

Most Popular

Recent Comments