கௌதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகி உள்ளது.

படம் வெளியானதில் இருந்து இப்போதுவரை ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களே அதிகம் இடம்பெற்று வருகிறது. கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்புவின் நடிப்பும் கதாபாத்திரத்துக்காக தன்னை இளைத்து உருமாற்றிக் கொண்ட விதமும் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடும் இந்தப் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர்.

இந்த நிகழ்வின் போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தில் நடித்ததற்காக நிச்சயம் சிம்புவிற்கு தேசிய விருது கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார்.

இயக்குனர் கௌதம் மேனன் பேசும்போது, “நான் ஒரு கதை கொண்டு வரும் போது, அதை என்னை நம்பி எப்பொழுதும் ஒத்துகொள்ளும் சிம்புவிற்கு நன்றி. சிம்பு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றார்.

நடிகர் சிம்பு பேசும்போது, ‘என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சி தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதை தான் செய்வதாக இருந்தது இந்தக்கதை கேட்டவுடன் இதை செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி சாருக்கு நன்றி.

இந்தப்படத்தின் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன் அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள் நான் பரவாயில்லை. ஆனால் அது அவர்களுக்கு பலருக்கு வலியை தரும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். வெந்து தணிந்தது காடு பாகம் 2-ஐ ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்சனோடு எழுதுங்கள்”. என்று கேட்டுக்கொண்டார்