கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சமீபத்தில் 100 நாட்களை தொட்டது. கோவையில் உள்ள கேஜி என்கிற திரையரங்கில் இந்த படம் 100 நாட்கள் ஓடியுள்ளது.
இப்போதைய காலகட்டத்தில் ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயம் என்கிற நிலையில் விக்ரம் படம் 100 நாட்கள் ஓடியுள்ளது மிகப்பெரிய சாதனைதான்..
இதற்கு கமல் மட்டுமல்லாது இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், நரேன், காயத்ரி என பல நட்சத்திரங்களும் காரணமாக அமைந்துள்ளார்கள். படத்திற்கு அனிருத்தின் இசையும் பக்கபலமாக இருந்து உள்ளது.
இந்த நிலையில் கோவை கேஜி திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட கமல் பேசும்போது, “வட இந்தியாவில் நம் சினிமாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். தென்னிந்திய சினிமா பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பி விட்டது.
நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள்.. மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு அதிகமாகும்.. என்னை மட்டுமல்ல நன்றாக நடிக்கும் நடிகரையும் வாழ்த்துங்கள்..
நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது.. ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார். மேலும் திரையரங்கு ஊழியர்களுக்கு கமல் தனது கைகளால் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.