மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட வரலாற்றுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் வரலாற்று கதாபாத்திரங்களாக உலா வர இருக்கின்றனர்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விக்ரம் ட்விட்டரில் தனது பெயரை ஆதித்த கரிகாலன் என மாற்றிக் கொண்டுள்ளார்.
அதேபோல இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை திரிஷாவும் தனது சோசியல் மீடியா பக்கத்து குந்தவை என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்ல ஆதித்த கரிகாலன் ஆகவே மாறிவிட்ட நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தஞ்சாவூர் செல்வது குறித்து ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார் அதுபற்றி அவர் கூறும்போது, “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா” என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள கார்த்தி, “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் இலங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை.. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.