கடந்த 10 வருடங்களுக்கு முன் விதார்த் நடிப்பில் வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப்படம் விதார்த்தின் நடிப்பு திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது. அந்த படம் வெளியாகி 12 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் அதன்பிறகு அப்படி ஒரு மிகப்பெரிய வெற்றியை விதார்த் நடித்த படங்கள் எதுவும் பெறவில்லை.. என்றாலும் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக, தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஓரளவுக்கு லாபம் தரக்கூடிய படமாகவே இருந்து வருகின்றன.

குறிப்பாக அவரது கதை தேர்வு தான் அவரது இந்த நீண்ட பயணத்தை தடங்கலின்றி பயணிக்க செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பயணிகள் கவனிக்கவும் என்கிற படத்தில் விதார்த்தின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் விதார்த் புலனாய்வு விசாரணை பாணியில் க்ரைம் திரில்லராக உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் என்பவர் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். கதை திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் எழுதுகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி உள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சண்டைக்காட்சிகளை தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் வடிவமைக்கிறார்.