பரியேறும் பெருமாள் என்கிற தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதியும் விதமான கதையம்சத்துடன் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் தனது மூன்றாவது படமாக உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் மாமன்னன் என்கிற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், வில்லனாக பஹத் பாசில் மற்றும் முக்கிய வேடத்தில் வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.
நேற்று தனது பிறந்த நாளை நடிகர் வடிவேலு இந்த படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடினார்.
இந்த நிலையில் மறுநாளே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீண்டும் படக்குழுவினர் உற்சாகத்துடன் இதைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
கிராமத்து கதையாக உருவாகிவரும் இந்தப் படத்திற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, சேலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.