கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தயாரித்த வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது நித்தம் ஒரு வானம் என்ற படத்தை தயாரித்து வருகிறது.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் ஆகாசம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா, மற்றும் சிவாத்மிகா ராஜசேகர் என மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது,
இந்த நிலையில் இந்தப்படத்தில் மூன்று கதாநாயகிகள் கதாபாத்திர பெயருடன் கூடிய தனித்தனி போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதில் சுபா என்கிற பெயரில் ரிது வர்மா நடிக்கிறார். இவர் ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தவர் தான்.
அதேபோல மதி என்கிற கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். டிராக்டர் ஓட்டுவது போல வெளியாகியிருக்கும் இவரது போஸ்டரைப் பார்த்தால் சூரரைப்போற்று படத்தில் வரும் தைரியமான இவரது பொன்னி கதாபாத்திரத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது..
மூன்றாவதாக மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் சிவாத்மிகா நடிக்கிறார். இவர் பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதா தம்பதியின் மகள் ஆவார்.
இதற்கு முன் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்று கதாநாயகிகளும் இதேபோல் தான் அறிமுகப்படுத்த பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குனர் ரா கார்த்திக் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் நம் மனதில் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.