கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் நிலவிய சூழலில் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக ஆரம்பித்தன. தியேட்டர்கள் திறந்த பின்னரும் பல பெரிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு சிறிய படங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் பல பேர் தங்களது படங்களை தியேட்டர்களில் வெளியிட விரும்புகின்றனர். இந்த நிலையில் படத்தின் ரிலீசை எப்படி முடிவுசெய்ய வேண்டும் என நடிகரும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஸ்டுடியோ 9 ஆர்கே சுரேஷ் சமீபத்தில் ஒரு முன்னெச்சரிக்கை தன் அனுபவத்திலிருந்து சில விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜயகாந்த் நடித்த கண்ணுபட போகுதய்யா படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் ஆர்கே சுரேஷ். இந்தப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டபோது ஆர்கே சுரேஷ் பேசுகையில், “நான் நடித்த விசித்திரன் படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
நான் தயாரித்த மாமனிதன் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய் தான் கிடைத்தது. ஆனால் அதுவே ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலேயே அதிக வசூல் செய்த படம் அதுதான்.
என்னிடம் படம் ரிலீஸ் செய்யச்சொல்லி வருபவர்களிடம் படத்தை பார்த்ததும் நானே சில படங்களை தியேட்டருக்கு வேண்டாம், ஓடிடிக்கு கொடுத்து விடுங்கள் என சொல்லிவிடுகிறேன்.. ஏனென்றால் ஓடிடிக்கு என எடுக்கும் படத்தை தியேட்டருக்கு தூக்கிட்டு போகக்கூடாது. படம் எடுக்கும்போதே எதில் திரையிட போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும்.. இங்கே எட்டு நடிகர்களுக்கு மட்டும் தான் தியேட்டர்களில் நல்ல புக்கிங் மற்றும் ஓப்பனிங் இருக்கிறது. என்று கூறினார்.