தனுஷ் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விக்ரம் படத்திற்கு அடுத்து ஒரு மிகப் பிரம்மாண்டமான வெற்றியை இந்த படம் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் நானே வருவேன் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. பத்து வருடங்களுக்கு பிறகு இயக்குனர் செல்வராகவனும் தனுஷும் இந்த படத்தில் இணைந்திருப்பதும் அவர்களுடன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு யுவன்சங்கர் ராஜா கை கோர்த்திருப்பதும் தனுஷ் ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல பிரம்மாண்டமான படங்களை தயாரிப்பதற்கு பெயர் போன கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கலைப்புலி தாணு தற்போது அறிவித்துள்ளார்.

சமீபத்தில் வேற்றுமொழி படங்களான பிரம்மாஸ்திரா, லைகர் ஆகிய படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் ஒரு பக்கமும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு என தமிழில் உருவாகி வந்த பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் இன்னொரு பக்கம் என மாறிமாறி நடைபெற்றன இந்த நிலையில் தனுஷின் நானே வருவேன் பட இசை வெளியீட்டு விழாவும் அந்த பட்டியலில் விரைவில் சேர இருக்கிறது..