எப் ஐ ஆர் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ், கட்டா குஸ்தி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதை தொடர்ந்து அடுத்ததாக ஆர்யன் என்கிற படத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால்.

இந்த படத்தை பிரவீண் கே என்பவர் இயக்குகிறார். இவர் கவுதம் மேனனிடம் பல வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல விஷ்ணு விஷால் நடித்த எப் ஐ ஆர் பட இயக்குனர் மனு ஆனந்த்துடன் இணைந்து சில வெப்சீரிஸ்களில் பணியாற்றியுள்ளார். ஆர்யன் படத்தில் கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணிபோஜன் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அந்தவகையில் பீஸ்ட் சாணிக்காயிதம் ஆகிய படங்களில் குணசித்திர நடிகராக நடித்த இயக்குனர் செல்வராகவன், இந்த படத்தில் வில்லனாக புரமோஷன் பெற்றுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் பிரவீன் கே கூறும்போது இதில் விஷ்ணு விஷால் போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படமும் துப்பறியும் கதையம்சம் கொண்ட படம் தான் என்றாலும் இது ராட்சசன் பாணியில் இருக்காது. மொத்தம் ஐந்து நாட்களில் நடைபெறும் கதையாக இந்தப் படம் உருவாகி உள்ளது என்று கூறியுள்ளார்.