பெரும்பாலும் எந்த மொழி சினிமா ஆனாலும் நடிகர் நடிகைகளின் வாரிசுகள் அவர்கள் பாணியிலேயே நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமில்லை ஆனால் பிரபல இயக்குனர்களின் வாரிசுகளும் தங்களது தந்தையை போல டைரக்ஷன் துறையை தேர்ந்தெடுக்காமல் அவர்களும் நடிப்பின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பி நடிப்புலகில் நுழைகின்றனர்.
அந்த வகையில் லேட்டஸ்ட் வரவாக பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ‘ஹிட் லிஸ்ட்’ என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தனது ஆர்கே செல்லுலாய்ட் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இந்தப்படத்தை இரட்டை இயக்குனர்களான சூரியகதிர், கார்த்திகேயன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். இந்தப் படம் கமர்ஷியல் ஆக்ஷன் திரைப் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது.
இதில் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக இயக்குனர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விக்ரமனின் மகனை வாழ்த்தினார்கள்.
90களில் புதுவசந்தம் மூலம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான சிந்தனையுடன் களம் இறங்கியவர் இயக்குனர் விக்ரமன். தொடர்ந்து ஹிட் படங்களாக குடும்பத்துடன் அனைவரும் கண்டு களிக்கும் படங்களாக இயக்கியவர்.. தனது படங்களிலும் புதுமுகங்களையும் நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களையும் கூட அறிமுகப்படுத்தி மிகப்பெரிய ஆட்களாக உருவாக்கியவர்.
இவரிடம்தான் சிலகாலம் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் டைரக்ஷன் தொழில் கற்றார் அந்த குருபக்தியின் அடிப்படையில் தற்போது தனது குருநாதரின் மகன் படத்தையே தயாரிக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.