நேற்று விநாயகர் சதுர்த்தியன்று அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் எட்டு விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருப்பது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது. கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருப்பது என ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
படம் வெளியாகும்போதே 3 மணி நேரம் 3 நிமிடம் 3 நொடிகள் என 183 நிமிடங்கள் ஓடும் விதமாக சென்சார் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் படம் பார்த்த அனைவருமே படம் நன்றாக இருந்தாலும், படத்தின் அதிகப்படியான நீளம் ஒரு மைனஸ் பாயிண்ட் தான் என தவறாமல் குறிப்பிட்டு வருகின்றனர்.
குறிப்பாக முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும் இரண்டாம் பாதியில் கிளைக்கதைகளும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் என படத்தின் ஓட்டத்தை தடுத்து நிறுத்தும் ஸ்பீடு பிரேக்கர்களாக இருப்பதால் பலரும் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் சற்றே ட்ரிம் பண்ணினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து இருபது நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று மாலை முதல் ட்ரிம் செய்யப்பட கோப்ரா திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதை முன்னரே செய்திருந்தால் படம் வெளியான தினத்திலேயே ஒரு ஹிட் படம் என அழுத்தமான முத்திரையை கோப்ரா பதித்திருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்,.