நடிகர் ஜீவா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டன அதன்பிறகு அடுத்தடுத்து பல நடிகர்கள் போட்டிக்கு களத்தில் இறங்கினாலும் இன்னும் ரேசில் ஓடும் பந்தய குதிரையாகவே தொடர்ந்து பிசியாக படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.
இந்த நிலையில் சூர்யா கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது போல, கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது போல, அர்ஜுன் சாகச நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியது போல, நடிகர் ஜீவாவும் விரைவில் ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார்.
ஆம்.. ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் நடிகர் ஜீவா டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.
உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. விளையாட்டை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.
இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பது தான் சுவாரசியமான பகுதி. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களும், சந்தாதாரர்களும், புதிய வாடிக்கையாளர்களும் ‘சர்க்கார் வித் ஜீவா’வைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.