பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் ஹீரோவாக கோலோச்சி வந்த காலத்தில் பல இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாக வலம் வந்தவர்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக உருவெடுத்த ரஜினிகாந்த் சிரஞ்சீவி உள்ளிட்ட பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர். தனது 80 வயதிலும் இன்னும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார்.
பெரும்பாலும், தங்களது அபிமான ஹீரோக்களின் படம் வெளியாகும் சமயத்தில் மிக பிரமானடமான கட்அவுட்களை வைப்பதோடு திருப்திப்பட்டு கொள்ளும் ரசிகர்கள் மத்தியில், அமெரிக்க இந்திய வம்சாவளி ரசிகரான கோபி என்பவர் தனது அபிமான ஹீரோவான அமிதாப்பச்சனுக்கு தனது வீட்டிலேயே உருவச்சிலை வைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சன் நடத்திய நடத்திவரும் கோன் பனேகா குரோர்பதி என்கிற நிகழ்ச்சியில் அவர் நாற்காலியில் ஸ்டைலாக அமர்ந்திருப்பது போன்று இந்த உருவச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தானும், தனது மனைவியும் அமிதாப்பின் தீவிர ரசிகர்கள் என்பதால் இதை தனது வீட்டில் நிறுவியுள்ளதாக கூறும் ரசிகர் கோபி இதன் திறப்பு விழாவை வெகு விமரிசையாக நடத்தியுள்ளார். அமெரிக்காவில் அவரது பகுதியில் வசிக்கும் அமிதாப்பச்சனின் ரசிகர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சந்தோஷம் அடைந்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.