கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த மெரினா திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சதீஷ். இந்த பத்து வருடங்களில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் அதிக படங்களில் நண்பனாக இணைந்து நடித்த சதீஷ், இந்த வருடம் வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமல்ல தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள கணம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்க, ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை அமலா ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சதீஷுடன் நடிகர் ரமேஷ் திலக்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்தது பற்றி சதீஷ் கூறும்போது, “தற்போது, இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். ஆனால், இப்படத்தில் மூன்று பேரும் நாயகர்கள் மாதிரி தான் நடித்திருக்கிறோம். இந்த படத்தில் எனக்கு அம்மா இருக்கிறார். எனக்கென்று தனியாக கதை இருக்கிறது. எனக்கு இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், இருவரும் புதுமுகம். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்தோம். இன்று தமிழ் மொழிக்கான காட்சி எடுத்தால், அதே காட்சியை மறுநாள் தெலுங்கு மொழியில் எடுப்போம்
என்னுடைய கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த கதையைக் கேட்டேன். இந்த கதையை கேட்கும்போது என் வாழ்க்கையில் இருந்து எடுத்த மாதிரிதான் இருந்தது. இந்த படத்தில் பெண் தேடும் பாத்திரம், ஒரு கட்டத்தில் நான் இறந்த காலத்தில் சென்றே தேடிக் கொள்கிறேன் என்று செல்லும்படியாக இருக்கும். என்றார்