சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா தற்போது நடித்து வரும் கேப்டன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஆர்யாவை வைத்து டெடி என்கிற படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.
அதுமட்டுமல்ல இந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்கும் ஆர்யா, எதிரிகளாக மோதுவது தீவிரவாதிகளுடனோ அல்லது ரவுடிகளுடனோ அல்ல.. ஏலியன்களுடன் மோதுகிறார் என்பதே இந்த படத்தின் ஹைலைட்.
இந்த படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் செப்-8ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஆர்.பி.சவுத்ரி ஆகியோருடன் ஆர்யாவின் நெருக்கமான நண்பரான நடிகர் சந்தானமும் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வேறொருவர் பட நிகழ்ச்சியில் சந்தானம் கலந்து கொள்வது இப்போதுதான்,
நிகழ்ச்சியில் சந்தானம் பேசும்போது, “ஆர்யாவை பற்றி ரொம்பவே புகழ்ந்தார். குறிப்பாக பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடிக்கும்போது எனக்கும் முக்கியத்துவம் கொடுத்து பெருந்தன்மையுடன் ஆர்யா நடந்து கொண்டார்.
நான் ஹீரோவாக மாற முயற்சித்த சமயத்தில் அதற்கேற்ற பிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என என்னை தொடர்ந்து வலியுறுத்தி மாற்றியதில் அவரது பங்கு நிறையவே உண்டு. இப்போது சொல்கிறேன் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் மீண்டும் நான் காமெடியனாக நடிக்க தயாராக இருக்கிறேன்.. இது ஆர்யா மீதான நட்புக்காக” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்