அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து மீண்டும் இதில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகி மற்றும் இன்னும் பிற நட்சத்திரங்கள் யார் யார் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகாத நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் அதிரதியாக இந்த படத்தில் நடிக்கும் குறிப்பிட்ட சில நடிகர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார்.

இதற்கு முன்னதாக படிக்காதவன், அதன்பிறகு பல வருடங்கள் கழித்து படையப்பா, அதைத் தொடர்ந்து பாபா ஆகிய படங்களில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த ரம்யா கிருஷ்ணன் கிட்டத்தட்ட 2௦ வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இதில் அவருடன் இணைந்துள்ளார்.
அடுத்ததாக நடிகர் வசந்த் ரவி.. இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலமாக அறிமுகமான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் வெளியான ராக்கி என்கிற படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்த நிலையில் இவரும் ஜெயிலர் படத்தில் இணைந்திருப்பது, இவரது திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுறையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல மலையாள நடிகர் விநாயகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் விஷால் நடித்த திமிரு என்கிற திரைப்படத்தில், வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விநாயகன்.

அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மலையாளத்தில் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். மிகவும் இயல்பான மிகச்சிறந்த நடிப்பை வழங்கக்கூடிய விநாயகன் இந்த படத்தில் இணைந்து இருப்பது இந்த படத்திற்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் என்று சொல்லலாம்.

அடுத்ததாக யோகிபாபு. ஏற்கனவே தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து காமெடி தோரணம் கட்டி தொங்க விட்டவர் யோகிபாபு இந்த நிலையில் மீண்டும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்துள்ளார். அதனால் மீண்டும் இவர்கள் இருவரின் காமெடி களைகட்டும் என்பதும் உறுதி.
இவர்கள் தவிர இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்களில் பெயர்கள் குறித்து அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.