பொதுவாகவே இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படங்கள் மட்டும் வித்தியாசமாக தனித்துவமாக இருப்பதில்லை.. அவரது பேச்சுக்களும் உரையாடல்களும் கூட பெரும்பாலும் அப்படித்தான் இருந்து வருகின்றன. அவர் பொதுமேடைகளில் பேசும்போது கூட உண்மையை பேசுகிறோம் என நினைத்து சில விஷயங்களை பளிச்சன பேசி விடுவார். அது பலரை காயப்படுத்தும் என்பதை அவர் உணர்ந்து இருப்பாரா என்பது தெரியவில்லை.
சமீபத்தில் கூட விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிஷ்கின், இதுவரை விஜய் ஆண்டனி நடித்த படங்கள் ஒன்று கூட நான் பார்த்ததே இல்லை என்று மேடையில் பேசினார். உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஈரானிய, கொரியன் படங்களை தேடிப்பார்க்கும் மிஷ்கினுக்கு விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் கூடவா கண்களுக்கு தெரியவில்லை என்று ரசிகர்கள் அப்போதே அவரை கடுமையாக விமர்சித்தனர்.
இப்படி தனது பேச்சுக்களால் தன்னை அறியாமலேயே சர்ச்சையை கிளப்பி விடும் மிஷ்கின், சமீபத்தில் ஒரு பேட்டியில், தனது படத்தை விமர்சிப்பவர்கள் குறித்து திட்டி பேசியதாக வெளியாகி இருந்தது. இது விமர்சகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார் மிஷ்கின்
இதுபற்றி அவர் கூறும்போது, “என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.
என் படத்தை பாருங்கள்.. படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள்.. படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள். இப்போதல்ல, என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை. உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்..