நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வம்சியின் யுவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ குருவின் ஞானவேல் ராஜா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, கோவை சரளா, ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார்.

இதற்கு முன்பாக சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்தவர் தான் தேவிஸ்ரீ பிரசாத். அந்த வகையில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.

அதுமட்டுமல்ல கடந்த 2018-ல் விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர் படத்திற்கு இசையமைத்தவர், நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்போதுதான் சூர்யா படம் மூலமாக தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.