V4UMEDIA
HomeNewsMollywoodநட்சத்திரம் நகர்கிறது இசை வெளியீட்டு விழா ; ஹைலைட்ஸ்

நட்சத்திரம் நகர்கிறது இசை வெளியீட்டு விழா ; ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா இயக்குனர்களில் பா.ரஞ்சித் எப்பொழுதுமே ரசிகர்களை மட்டுமல்ல, திரை உலகத்தினரையும் சேர்த்து ஆச்சரியப்படுத்தி வருபவர். காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கிய பின்னர், அடுத்ததாக அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட்டைத்தான் அவர் தேடிப்போவார் என பலரும் நினைக்க, அவரோ ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்கிற படத்தை எடுத்து ஆச்சரியப்படுத்தினார். அதுமட்டுமல்ல அந்த படத்தை சூப்பர் ஹிட் ஆகவும் ஆக்கினார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் பெரிய ஹீரோ பக்கம் செல்வார் என பார்த்தால், வளர்ந்து வரும் இளம் நடிகரான காளிதாஸ் ஜெயராமை கதாநாயகனாக வைத்து, நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித். இந்த படத்தில் அவரது ஆஸ்தான நடிகர்களான கலையரசன், சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா, டான்சிங் ரோஸ் கபீர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், தான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட்பிரபு, சசி என 5 திரையுலக பிரபலங்களை அழைத்து இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார் பா.ரஞ்சித். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேசியதில் இருந்து ஹைலைட்டான அம்சங்களை பார்க்கலாம்.

இயக்குனர் சசி பேசும்போது, ‘பல பேர் பார்ப்பதற்கு பலசாலிகளைப் போல இருப்பார்கள். அவர்கள் செயல்கள் கோழைத்தனமாக இருக்கும். ஆனால் பா.ரஞ்சித் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் பல விஷயங்களை துணிச்சலாக செய்வார். ஒரு புத்தகத்திற்கு வைக்க வேண்டிய டைட்டில் ஆன நட்சத்திரம் நகர்கிறது என்பதை தனது படத்திற்கு டைட்டிலாக வைத்ததிலிருந்து அவர் எவ்வளவு தைரியமானவர் என்பதை தெரிந்து  கொள்ளலாம். ஆனால் அவரது ஒவ்வொரு படத்தையும் பார்த்தவுடன் என் கருத்தை சொல்லி விடுவேன். அந்த வகையில் இந்த படத்தின் கதாபாத்திர அறிமுக ட்ரெய்லரே வித்தியாசமாக இருக்கிறது. அதுவே படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது” என்றும் கூறினார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் முதன்முதலாக உருவான பரியேறும் பெருமாள் படத்திற்கு அதிக அளவில் திரையரங்குகள் கிடைக்காமல் இருந்த சூழலில் பா.ரஞ்சித்திற்கு தெரியாமலேயே அதிக தியேட்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ததாக புதிய தகவலை கூறி ஆச்சரியப்படுத்தினார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ள காளிதாஸ் ஜெயராம் பேசும்போது, “மெட்ராஸ் திரைப்படம் வெளியான சமயத்தில், நான் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது இயக்குனர் ரஞ்சித்திற்கு போன் செய்து பேசினேன். நான் யார் என்று கூட அவருக்கு அப்போது தெரியாது. ஆனால் படம் குறித்து நீண்ட நேரம் பேசினார், இப்போது அவரது இயக்கத்திலேயே நடித்திருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று கூறினார்.

“அட்டகத்தி படத்தை பார்த்தபோது, தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக எனக்கு தெரிந்தது அதேபோலத்தான் இப்போதும் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது. உறவுகள் பற்றி நாம் பேச தயங்கும் விஷயத்தை தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும். ரஞ்சித் மீண்டும் புது ட்ரெண்ட்டை உருவாக்கி இருக்கிறார்” என வாழ்த்து கூறினார் இயக்குனர் வெற்றி மாறன்.

இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது, “பா.ரஞ்சித் என்னை வந்து சந்தித்தபோது லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிடும்படி தான் கூறினார். ஆனால் எப்படியோ என்னிடம் மாட்டிக்கொண்டார்.. அதே சமயம் குருவை மிஞ்சும் சிஷ்யனாக மாறிவிட்டார். அவரது படங்கள் ஒவ்வொன்றும் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன” என்று கூறினார்.

இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “ஞானவேல் ராஜா அட்டகத்தி படத்தை வெளியிடவில்லை என்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கவே முடியாது. அதேபோலத்தான் கலைப்புலி தாணுவும் என் திரையுலக பயணத்தில் முக்கியமானவர்கள்.

அதேபோல வெங்கட்பிரபு சாரிடம் பணியாற்றிய போது, குறிப்பாக சென்னை 28 படம் தான், நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக் கொடுத்தது.

சசி சாரிடம் உதவியாளராக இருந்தபோது என்னை கூப்பிட்டு சரிக்கு சமமாக உட்கார வைத்து பேசுவார். என் உதவியாளர்களிடம் நான் அப்படி நடந்து கொள்ள அதுதான் காரணம்.

அதேபோல இயக்குனர் வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு சமரசமும் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர். அதனால் இந்த ஐந்து பேரும் இங்கு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று அவர்களை விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கான நெகிழ்ச்சியான காரணத்தையும் பகிர்ந்து கொண்டார் பா.ரஞ்சித்.

Most Popular

Recent Comments