மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த படம் என்றால் அது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் தான். காரணம் சிறுத்தை படத்தின் மூலம் கார்த்தியை வைத்து இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக உள்ளே நுழைந்த இயக்குனர் சிவா, அடுத்து சூர்யாவுடன் இணைவார் என அப்போது இருந்தே பேசப்பட்டு வந்தது.

அதே சமயம் அவர் தொடர்ந்து நான்கு முறை அஜித்தை வைத்தே தனது படங்களை இயக்கியதில் கிட்டத்தட்ட பத்து வருட காலம் ஓடிவிட்டது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அவர் சூர்யா படத்தை இயக்குவார் என கிட்டத்தட்ட உறுதியான நிலையில் தான், சில காரணங்களால் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டு அதற்கு பதிலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த என்கிற படத்தை இயக்கினார் சிறுத்தை சிவா.
அடுத்ததாக அவர் சூர்யாவை வைத்து தான் இயக்கப்போகிறார் என்பது அண்ணாத்த படம் வெளியாவதற்கு முன்பே உறுதியாகிவிட்டது. இருந்தாலும் சூர்யா, பாலா மற்றும் வெற்றிமாறன் படம் என கைவசம் சில படங்களை வைத்திருப்பதால் சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் எப்போது தொடங்கும் என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்திற்கு துவக்க விழா பூஜை நடைபெற்றதுடன், இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
