நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கமல் நடிப்பில் வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர். தொடர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கதாநாயகனாகவும் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களின் நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், இன்னொரு பக்கம் சபரி என்கிற படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆனதை கொண்டாடி வரும் நிலையில் காண்டிலோ பிக்சர்ஸ் மற்றும் டிடி நேஷனல் ஆகியவை இணைந்து ஸ்வராஜ் என்கிற தலைப்பில் புதிய வெப்சீரிஸ்களை தயாரித்து வருகின்றன.
சுதந்திரத்திற்காக உயர்நீத்த தியாக வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை மையப்படுத்தி உருவாகும் இந்த வெப் சீரிஸில் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கை தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரன் வேலுத்தம்பி பற்றிய வெப் சீரிஸ் ஒன்றும் தற்போது உருவாகியுள்ளது. இதில் வீரன் வேலுத்தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.
இது பற்றி அவர் கூறும்போது, “எந்த ஒரு நடிகருக்கும் மிக வலிமையான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்பதும் பெரும் கனவாக இருக்கும். அந்த வகையில் வீரன் வேலுத்தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு மாபெரும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.