கடந்த வெள்ளியன்று கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படம் வெளியானது. சூர்யாவின் 2d நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ், சூரி, ஆர்கே.சுரேஷ், மனோஜ் கே பாரதி, மைனா நந்தினி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகி இருந்த இந்த படம் பி மற்றும் சி சென்டர்கள் மட்டும் அல்லாமல் சென்னை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெற்றியை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி கடற்கரையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது படக்குழு.
குறிப்பாக இந்த படத்தில் பணியாற்றி வெற்றிக்கு துணை நின்ற தொழில்நுட்ப கலைஞர்களை அவர்களது குடும்பத்துடன் இந்த கொண்டாட்டத்திற்கு வரவழைத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சூர்யாவும் கார்த்தியும்.
இந்த நிகழ்வில் இயக்குனர் முத்தையா, தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இந்த படத்தை வெளியிட்ட சக்திவேலன் உள்ளிட்ட அனைவரும் தங்களது குடும்பத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கார்த்தி பேசும்போது, “பெண்கள்தான் வீட்டிற்கு தூண் போன்றவர்கள். ஒரு நேரம் அவர்கள் அசதியாக இருக்கிறது.. சமைக்க முடியவில்லை என்றால் அதை சோம்பேறித்தனம் என நினைக்கக் கூடாது. அவர்களுக்கும் ஓய்வு கொடுத்து ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் உணவை வாங்கித் தர வேண்டும்.
இந்த படத்தில் அதிதி ஷங்கரை ஹோட்டலுக்கு அழைத்து சென்று உணவு வாங்கித் தருவது கூட அப்படி யோசிக்கப்பட்ட ஒரு காட்சி தான். அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தால் தான் ஆண்களால் வெளியில் நிம்மதியாக வேலை செய்ய முடியும். அப்படிப்பட்ட குடும்பத்தையும் எங்களது வெற்றி கொண்டாட்டத்தில் பங்குபெற செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு” என்று கூறினார்.