கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி என்கிற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. குறிப்பாக பெண் ரசிகைகளிடம் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
அதை தொடர்ந்து வெளியான கீதா கோவிந்தம் படமும் இவரை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்றது. தமிழிலும் இவருக்கு வரவேற்பு இருந்ததால் நோட்டா என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்தியில் உருவாகும் லைகர் என்கிற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை நடிகை சார்மி கவுர். பூரி ஜெகன்நாத் மற்றும் பாலிவுட்டின் தர்மா புரொடக்ஷன்ஸ் கரண் ஜோஹர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். தென்னிந்திய மொழியில் அனைத்திலும் ஆகஸ்டு 25ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் மும்பை, ஹைதராபாத், சென்னை என மாறிமாறி கலந்து கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா. அந்த வகையில் தற்போது சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜய் தேவரகொண்டா.
அப்போது, “தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது நோட்டா படத்தின் போது என் மீது தமிழ் மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. தமிழ் இயக்குனர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது பா ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், போன்றவர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன்” என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்துள்ள லைகர் திரைப்படத்தை தமிழகத்தில் ஸ்டுடியோ 9 சார்பாக நடிகர் ஆர்.கே சுரேஷ் வெளியிடுகிறார்.