கொம்பன் படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா மற்றும் கார்த்தி இருவரும் மீண்டும் இணைந்துள்ள விருமன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா, சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் ரசிகர்களின் பேராதரவால். முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று வெற்றி கணக்கை தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக கார்த்தி நடிப்பில் இதற்கு முன் அதிகப்படியான வசூலை பெற்ற கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு இதற்கு வசூல் கிடைத்துள்ளதாக இந்த படத்தின் தமிழக வெளியீடு உரிமையை பெற்றிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டர் சக்திவேலன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குனர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து, இனிப்பு ஊட்டி இந்த வெற்றியை பகிர்ந்தும் கொண்டுள்ளார். அந்தவகையில் கார்த்தியின் திரைப்படங்களில் விருமன் அதிக வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.