எப்படி ஒரு பக்கம் நட்சத்திரங்களின் சம்பளம் ஏறிக்கொண்டே போகிறதோ, பட தயாரிப்பு செலவு அதிகரித்துக் கொண்டே போகிறதோ, அதேபோல காலத்திற்கேற்ப தியேட்டர் கட்டணங்களும் உயர்ந்துகொண்டே வருகின்றன. அதேசமயம் முன்பெல்லாம் கட்டணம் குறைவாக இருந்ததால் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்கள்.
ஆனால் தற்போது ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 169 ரூபாய் என்கிற அளவில் கட்டணம் இருப்பதால் பெருமளவில் குடும்பத்துடன் வந்து பார்க்கும் அந்த வழக்கம் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்தநிலையில் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் விதமாக சென்னையில் உள்ள கமலா தியேட்டர் நிர்வாகம் வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் அனைத்து டிக்கெட்டுகளும் 99 ரூபாய் என கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்துள்ளது.

வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் பல பெரிய படங்களை நான்கு நாட்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த கட்டண குறைப்பு ஒரு வரப்பிரசாதம் தான். இதன்மூலம் புதன்கிழமையும் ஒரு மிகப்பெரிய வசூல் தியேட்டருக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதேபோல மற்ற அனைத்து திரையரங்குகளிலும் செய்ய முன்வந்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் ஒருபடி மேலே நகரும் என்பதில் சந்தேகமில்லை.