கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கடந்த பல வருடங்களாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தான். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த படத்தை தங்களது இணையதளத்தில் ஏற்றி படத்திற்கு கிடைக்கும் வசூலை தடுத்து நிறுத்தி, பல தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எவ்வளவு புகார் அளித்தும் சைபர் கிரைம் போலீசார் கூட கையை பிசைந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் தமிழ் ராக்கர்ஸ் என்கிற பெயரிலேயே ஒரு வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, அவரை வைத்து குற்றம் 23, பார்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ள அறிவழகன் இதை இயக்கியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகிறது. இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அருண்விஜய் பேசும்போது இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும் மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவுக்கு கொண்டு வருகிறான் என்பதை சொல்லும்.
முதன்முதலாக வெப் சீரிஸில் நடிக்கிறேன்.. அதுவும் ஏவிஎம் பேனர், அறிவழகன் இயக்குனர் மற்றும் சோனி லிவ் உடன் இணைந்து உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸில் நடிப்பது மகிழ்ச்சியே.. சினிமாவில் நடிப்பதற்கும் வெப் சீரிஸில் நடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்