இயக்குனர் முத்தையா டைரக்ஷனில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகம் ஆகிறார்.
நான் மகான் அல்ல, கடைக்குட்டி சிங்கம் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர் சூரி பேசும்போது, ஆயிரம் அன்னசத்திரம் கட்டுவதை விட, ஆயிரம் கோவில்கள் கட்டுவதை விட, ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது.. அந்த பணியை சூர்யா கார்த்தி சகோதரர்கள் செய்து வருகிறார்கள் என பாராட்டும் விதமாக பேசி இருந்தார்.
இதை தொடர்ந்து கோவில்கள் கட்டுவது தவறு என்பது போல சூரி பேசியதாக பலரும் தங்களது எதிர்ப்பையும் கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூரி இது குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, ‘மதுரை விழாவில் நான் பேசியபோது ஆயிரம் கோவில்கள் கட்டுவதை விட, ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது என்கிற பாரதியாரின் கூற்றை தான் கூறினேன்.. நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல.. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவும் அப்படி கூறவில்லை. நான் மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன்” என்று கூறினார்