தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பு இரண்டிலுமே கை தேர்ந்த நடிகர்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடும் வகையில் ஒரு சிலர் தான் இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு இயக்குனராக தனது திரையுலக பயணத்தை துவங்கிய தம்பி ராமையா மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கினார். அதன்பின் ஒரு கட்டத்தில் அப்படியே நகைச்சுவை நடிகராக மாறி, பின்னர் குணச்சித்திர நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்து வந்த தம்பி ராமையாவுக்கு மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்புவதற்கான நேரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் ‘ராஜா கிளி’ என்கிற படத்தை இயக்குவதன் மூலம் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் டைரக்சனில் அடியெடுத்து வைத்துள்ளார்..
இயக்குனர் சமுத்திரக்கனி தான் இயக்கும் படங்களில் எப்படி தம்பி ராமையாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வலுவான கதாபாத்திரங்களை தருவாரோ, அதேபோல தற்போது தம்பி ராமையா தான் இயக்கும் இந்த ராஜா கிளி என்கிற படத்தில் சமுத்திரக்கனியையே கதையின் நாயகனாக மாற்றியுள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் தம்பி ராமையா கூறும்போது, “இந்தப்படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச்சிறந்த இயக்குனரும் கூட. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்களாக இருக்கும் வெகு சிலரில் சுரேஷ் காமாட்சியும் ஒருவர். கிட்டத்தட்ட 12 இயக்குனர்களிடம் இந்த கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி.
பெருந்திணை காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவது தான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன். இந்த கதையில் நிகழ்வதெல்லாம் சாத்தியாமா என்றால், இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி தான் உருவாகிறது.
படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு ஏற்படும். எல்லா தரப்பு வயதினருக்குமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சுழன்று கொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்கள் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் தங்களை தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும்” என்கிறார்.