மகாநடி படத்தை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் சீதா ராமம். இந்த படம் மற்ற தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைக்கு இவரது கதாபாத்திரம் ரொம்பவே திருப்புமுனையானது என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஹனுராகவபுடி என்பவர் இயக்கியுள்ளார்.
பொதுவாகவே மலையாள நடிகர்களுக்கு அரபு நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. குறிப்பாக துல்கர் சல்மானுக்கு அங்கே ரசிகர்கள் வட்டம் அதிகம். ஆனால் கடந்த முறை அவர் குரூப் என்கிற படத்தில் நடித்தபோது சில காரணங்களால் அந்த படத்தை அரபு நாடுகள் வெளியிட தடை விதித்தன. இந்த நிலையில் தற்போது சீதா ராமம் படத்திற்கும் அரபு நாடுகள் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீதா ராமம் என்றாலே இந்துக்களை முன்னிலைப்படுத்தி உருவாகியுள்ள படம் போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளதால் மதம் சம்பந்தமான சென்சிட்டிவான பிரச்சனைகள் இதில் இருக்கலாம் என கருதி இந்த படத்தை அங்கே வெளியிட தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அரபு நாடுகளில் வெளியிடுவதற்காக தனியாக சென்சார் செய்து அங்கே படத்தை வரும் நாட்களில் திரையிடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.