தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நட்சத்திரங்களின் வாரிசுகள் நடிப்பை குறிவைத்து களம் இறங்குவது வழக்கம். அதிலும் பெரும்பாலும் ஹீரோக்கள் தான் அதிகம் வருவார்களே தவிர, கதாநாயகிகளாக உருவாகும் வாரிசுகள் எண்ணிக்கை வெகு குறைவுதான். அந்த வகையில் வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வரிசையில் தமிழ் சினிமாவில் புதிய கதாநாயகியாக விருமன் படம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.

இவர் டாக்டருக்கு படித்திருந்தாலும் இவரது ஈடுபாடு எல்லாம் நடிப்பை நோக்கியே இருந்ததால் இயக்குனர் ஷங்கரும் தனது மகளின் ஆர்வத்திற்கு பச்சைக்கொடி காட்டி விட்டார். அந்தவகையில் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ள அதிதி அந்த படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் ஷங்கரும் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசும்போது, “எனது மகளுக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பு ஆர்வம் உண்டு. நான் அவரது செயல்பாடுகளை கவனித்ததில் இருந்து ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொண்டேன் அவர் ஒரு நல்ல என்டர்டைனர் என்பது..
இந்த படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோது இந்த படத்தின் கதை குறித்து நான் கேட்கவில்லை. அது மட்டுமல்ல இயக்குனர் முத்தையா இயக்கிய படங்களை இதுவரை நான் பார்க்கவும் இல்லை. இந்த படத்தை சூர்யாவும் ஜோதிகாகவும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்கிறபோது படத்தின் கதையை எதற்காக கேட்க வேண்டும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது” என்று கூறியுள்ளார்