நடிகர் விஜய்யின் உறவுக்காரர், ஒன்றுவிட்ட தம்பி என்கிற முறையில் சினிமாவில் நடிகர் விக்ராந்திற்கு ஆரம்பமே மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. அது மட்டுமல்ல அதுவே எதிர்பார்ப்பாகவும் மாறியது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை விக்ராந்தால் இப்போது வரை முழுதாக ஈடு கட்ட முடியவில்லை என்றாலும், அதற்காக அவர் முழுமூச்சாக முயன்று கொண்டுதான் இருக்கிறார். குறிப்பாக சுசீந்திரன். சமுத்திரக்கனி போன்ற இயக்குனர்கள் விக்ராந்திடம் மறைந்திருக்கும் திறமையை அவ்வப்போது தங்கள் படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டுதான் வருகிறார்கள்.
இந்த நிலையில் விக்ராந்த் தற்போது கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்று தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்த குடும்பப்பாங்கான கதை அம்சத்துடன் உருவாகிறது. தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கிய வி.பி நாகேஸ்வரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடிகை ஷெரின் காஞ்ச்வாலா என்பவர் நடிக்கிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மை உண்டு என்கிற படத்தில் அறிமுகமாகி, டிக்கிலோனா படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்தவர் என்பதும் இவர்தான் தற்போது யோகிபாபு நடித்துவரும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.