சினிமாவில் நுழைந்த மிக குறுகிய காலத்திலேயே, தான் இயக்கிய நான்கு படங்களிலேயே மிகப்பெரிய இயக்குனர் என்கிற நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமலேயே திரையுலகில் நுழைந்த இவர் முதலில் மாநகரம் என்கிற சிறிய படத்தை இயக்கி அதன் பின் கார்த்தி நடித்த கைதி, விஜய் நடித்த மாஸ்டர், தற்போது கமல் நடித்த விக்ரம் என மிகப் பெரிய நட்சத்திரங்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார்.

தவிர மற்ற சில இயக்குனர்களை போல மீடியாக்களையும் ரசிகர்களையும் விட்டு ஒதுங்கி இருக்காமல் அவர்களுடன் தனது படம் குறித்த தகவல்களையும் கருத்துக்களையும் தொடர்ந்து பரிமாறுவதற்கும் தயக்கம் காட்டாதவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் கேள்விக்கும் தவறாமல் பதில் அளித்து வருபவர்.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்காக தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விடை பெறுவதாகவும் அடுத்த படம் தொடர்பான பணிகளை கவனிக்க போவதாகவும் கூறி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்ததாக அவர் விஜய் படத்தை இயக்க இருக்கிறார் என்கிற தகவல் உறுதியாகி உள்ள நிலையில். அதுபற்றிய அப்டேட்டுகளை அவரிடம் இருந்து பெறலாம் என நினைத்த ரசிகர்கள், இவரது இந்த அறிவிப்பால் சற்று அதிர்ச்சியாகி உள்ளார்கள் என்பது நிஜம்.