அர்ஜுன் ரெட்டி கீதா கோவிந்தம் என தெலுங்கு திரையுலகில் அறிமுகமான முதல் இரண்டு படங்களிலேயே மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் தற்போது பாலிவுட்டிலும் என அவரது ரசிகர் வட்டம் விரிவடைந்திருக்கிறது. அதை இன்னும் அதிகமாக்கும் விதமாக தெலுங்கின் பிரபல முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் லைகர் என்கிற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக, நடிக்க நடிகை சார்மி கவுர் இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இந்தியில் இந்த படத்தின் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் கைகோர்த்து இருக்கிறார்.
இந்தப் படம் விரைவில் வெளியாக இருப்பதை முன்னிட்டு இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது துவங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது மும்பையில் உள்ள மிகப்பெரிய மால் ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவை பார்ப்பதற்காக மிகப்பெரிய ரசிகர் கூட்டமே திரண்டிருந்தது. இதைப்பார்த்து உற்சாகமான விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் ரசிகர்களுடன் செல்பி எடுத்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.